திரு. மதிவாணன் அவர்கள் பி.இ. படித்த 5
ஆண்டு களப்பணியில் அனுபவமிக்க சிவில் பொறியாளர். ஒரு பெரிய நிறுவனத்தில்
நல்ல சம்பளத்தில் பணி புரிந்து வந்தார். எத்தனை நாள்தான் ஒரு நிறுவனத்தில்
வேலை செய்வது? தாமே சொந்தமாக புராஜெக்டுகளை மேற்கொண்டால் என்ன என்ற எண்ணம் சில நாட்களாகவே அவருக்கு இருந்து வந்தது. அந்த
சமயத்தில்தான் தெரிந்த வட்டாரத்தின் மூலமாக 1200 ச.அடியில் வீடு ஒன்றை கட்டித் தரும்படி
அழைப்பு ஒன்று வந்தது. ஒரு விதத்தில் தனக்கு உறவினராகவும் அவர் இருந்ததால், அந்த புராஜெக்டை மதிவாணன் ஏற்றுக் கொண்டார்.
அது மட்டு மல்லாமல், தான் பணிபுரிந்த வேலையையும் துறந்தார். அந்த உறவினரின் மனையைப் பார்வையிட்டு அதற்கேற்றபடி பல பிளான்களை
வரைந்து அவற்றில் ஒன்றை ஓகே செய்தார். பிளான் அப்ரூவல் போன்ற பல்வேறு
அனுமதிகளையும் 6 மாதங்கள் அலைந்து பெற்று உறவினரிடம் ஒப்படைத்தார். இதற்கென எந்த பயணப்படியையும், சம்பளத்தையும் மதிவாணன் பெற்றுக் கொள்ளவில்லை. ‘எப்பொழுது கட்டிட வேலையைத் துவங்கலாம்?’ என்று கேட்டபோது, ‘மழைக்கால மாக இருக்கிறது. இன்னும் சில நாட்கள்
போகட்டும்’ என்று சொன்னார் அந்த உறவினர். மூன்று மாதம் கழித்து
மறுபடியும் கேட்டபோது, ‘எனது பெரிய மகளுக்கு திருமணம் நிச்சயித்திருக்
கிறேன். எனவே, இப்போதைக்கு வீடு கட்டும் திட்டம் இல்லை. எப்பொழுது இந்த
வீட்டைக் கட்டுகிறேனோ, அப்போது உங்களை அழைக்கிறேன்‘ என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார் உறவினர். தன்னுடைய உழைப்பெல்லாம் வீணாகிப் போனது, வேலையும் பறிபோனது. இந்த புராஜெக்டை வைத்து தன்னுடைய திறமையை நிரூபித்து தொடர்ச்சியாக பல புராஜெக்டுகளை செய்யலாம் என்கிற கனவுகள் நொறுங்கிப் போன சோகத்துடன்
வீடு திரும்பினார் மதிவாணன். ஆனால், அந்த உறவினர் தந்திரம் பிறகுதான் மதிவாணனுக்குத் தெரிந்தது. இரு வாரங்களுக்குப் பிறகு மதிவாணனின்
நண்பர் அந்த உறவினர் மனையின் பக்கமாக போகும்போது அங்கு கட்டிட வேலைகள்
துவங்கப்பட்டிருப்பதைப் பார்த்தார். மதிவாணன் பிளானை வைத்து வேறு ஒரு
மேஸ்திரியை வைத்து அந்த வீட்டை கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் அந்த
உறவினர். பொறியாளராகிய மதிவாணனுக்குத் தர வேண்டிய 2 சதவீத கமிக்ஷனை மிச்சம் பிடிப்பதற்காக
அந்த உறவினர் செய்த தந்திரத்தை மதிவாணனுக்கு உடனடியாகத் தெரிவித்தார் நண்பர். மதிவாணன் வெகுண்டு எழ, அந்த உறவினரோ ‘நாம்தான் எந்த அக்ரிமெண்டும் போடவில்லையே, உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள்’
என சொல்லியிருக்கிறார் சவடாலாக. காவல்துறைக்குச் சென்ற பிறகும்
மதிவாணனுக்கு எந்த வித நீதியும் கிடைக்கவில்லை. குஷூப்பிட்ட பெயர்களை
நீக்கிவிட்டால் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரவலாக நடந்து வரும் அவலமாகி
விட்டது. சிவில் பொறியாளர்களின் உழைப்பைத் திருடும் ஆட்கள் தற்போது
பல்கிப் பெருகிவிட்டனர். குறிப்பாக, தனது அறிமுகப் புராஜெக்டுகளில் ஏமாறும் பொறியாளர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. இது குறித்து கட்டுமானத்துறையில் 25
ஆண்டுகளுக்கும் மேல் தனி புராஜெக்டுகளை முடித்தவரும், பெரிய கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமும் பெற்ற பொறி.சமரச ராஜா அவர்களிடம் கேட்டபோது: “பெரும்பாலான வாடிக்கை யாளர்கள் தங்களது
வீட்டை கட்டுவதற்கு முன் ஒரு பொறியாளரை அணுகி, அதற்கான பிளான், அப்ரூவல் போன்றவற்றை வாங்கிய பின்,
‘நீங்கள்தான் வீட்டை கட்டப் போகிறீர்கள்’
என்று அந்தப் பொறியாளரிடம் சொல்லி வீட்டிற்கான பட்ஜெட் எஸ்டிமேட்டை பெறுகிறார்கள். இந்த கட்டுமானப் பணி நமக்குத்தான் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் அதிகப்படியான பிளான்களைப் போட்டுக் காண்பிக்கிறார். இப்பணிக்கான ரேட்டையும் மிகக் குறைவாகவே நிர்ணயிக்கிறார். பின்னர், வாடிக்கையாளர்கள் அவர்களுடைய
உறவினர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ வீடு கட்டுவதைப் பற்றிச் சொல்லி ஆலோசனை
கேட்கிறார்கள். அவர்களும் அந்த வாடிக்கையாளரிடம், ‘பொறியாளர் கேட்கும் தொகை மிக அதிகமாக
உள்ளது. எனவே, அவரிடம் வீடு கட்டுமான பணியை கொடுக்காமல், குறைந்த செலவில் ஒரு மேஸ்திரியை வைத்து வீட்டைக் கட்டலாமே’ என்று தவறான ஆலோசனையை அளிக்கிறார்கள். இத்தகைய தவறான வழிகாட்டுதலால் வாடிக்கை ளாருக்குத்தான் நஷ்டம்.
இப்படி ஒரு சாதாரண மேஸ்திரியிடம் வீடு கட்டுவதை ஒப்படைப்பதால்
அஸ்திவாரத்திலிருந்து, தளம் மற்றும் இதர பணிகள் வரை கட்டுமானத்தின் தரம் குறைந்து விடுகிறது என்பது நிதர்சனமான உண்மை. ஒரு பொறியாளரைக் கொண்டு வீடு
கட்டப்படும்போதுதான் அந்த நிலத்தின் தன்மையைப் பற்றி அறிந்து அதற்கேற்ற அஸ்திவாரத்தை
அமைப்பார். பில்லர்கள், காலம்கள், தளங்களுக்கு எந்தவகை கம்பிகளை பயன்படுத்த வேண்டும்? கான்கிரீட் கலவை எந்த விகிதாசாரத்தில் இருக்க வேண்டும்? என்று மிக நுண்ணியமாக அளவிட்டு
பணிகளைச் செய்யச் சொல்வார். ஆகவே, ஒரு அனுபவமிக்க பொறியாளரின் ஆலோசனைப்படி கட்டப்படும் கட்டுமானங்கள் மட்டுமே தர மானவையாகவும், உறுதியானதாகவும், நீடித்த ஆயுள் கொண்டவையாகவும் இருக்கும்.பிளானுக்கு மட்டும்
பொறியாளரை வைத்துக் கொண்டு அவர்களின் உழைப்பைச் சுரண்டுவது மிகவும்
குரூரமானது” என்றார் பொறி. சமரச ராஜா. அனுபவம் வாய்ந்த கட்டிடக் கலைஞர் திரு.
செல்வகுமார் கூறும்போது: “கொடுக்கப்பட்ட சைட்டை நல்ல முறையில் உபயோகப்படுத்தி ஒவ்வொரு சதுர அடியையும் வீணாக்காமல் உபயோகப்படும் வகையில் வடிவமைக்க ஒரு நல்ல
பி.ஆர்க். படித்த, அனுபவமுள்ள கட்டிட கலைஞரால் மட்டுமே முடியும். இன்றைய சூழ்நிலையில் வேறுபட்ட பல தரங்களைக் கொண்ட கட்டுமானப் பொருட்களின் மத்தியில் ஒரு
சிறந்த வல்லுனரின் ஆலோசனை அவசியமாகிறது. இது பெரிய கட்டு மானப் பணிகள் அல்லாது சிறிய அளவு வேலைகளுக்கும் பொருந்தும். இவ்வளவு வல்லுனர்கள் இருந்தும், தரமான கட்டுமான பொருட்கள் சந்தையில் இருந்தும், தரமற்ற முறையில் உபயோகமற்ற நிலையில் பல கட்டிடங்கள் இருப்பதற்கு காரணம் என்ன என்று ஆராய்கையில், மக்களின் அறியாமையும், அவர்களை வேறு மொழி பேசி மயக்கும் வல்லமையற்ற, அனுபவமற்ற பலரின் பண ஆசையாலும்,
அவர்களின் பேச்சில் மயங்கி இருக்கும் மக்களுமே
அவர்களின் கட்டிடம் தரமற்று இருப்பதற்கு காரணம். இன்று பல படித்த கட்டிட கலைஞர்கள்/பொறியாளர்கள் கான்ட்ராக்டர்களாக உருவெடுத்து உள்ளனர். அதாவது, ஒரு கட்டிடத்திற்கு எவ்வளவு உறுதி
தேவையோ அதை சேஃப் லேண்ட் என்று சொல்வார்கள். அது இருந்தால் மட் டுமே காலத்திற்கும் போதும். அதை டிசைன் செய்து கட்டினாலே போதும்.
ஆனால், அவற்றின் விளக்கம் ஏதும் அறியாமல் என்ன கிரேட் சிமெண்ட் போட வேண்டும்?
என்ன அளவு கம்பி போட வேண்டும்? என்று இல்லாமல், அளவுக்கு மிகுதியாய் போட்டு கட்டி விடுவார்கள். தேவையே இல்லாமல் அதிகமாக ஒரு டன் கம்பி செலவு ஆகியிருக்கும். இந்த விக்ஷயம் கூட கட்டிட உரிமையாளர்களுக்கு
தெரிவதில்லை. இது தவிர, கீழ்க்கண்ட விளைவுகளும் ஏற்படுகின்றன: டிசைனில் ஆர்க்கிடெக்ட்/ இன்ஜினியரின்
ஆலோசனை இல்லாமல் மாறுதல்களை செய்வதனால், அது எந்த நோக்கத்திற்காக
வடிவமைக்கப்பட்டதோ அதன் பொலிவை இழக்கிறது. கட்டிட உரிமையாளர்களும் பல
தடவை ஆலோசனை செய்துவிட்டு பின்னர் அப்படியே சென்று விடுவதால் கட்டிட கலைஞர்/பொறியாளர்கள் கடும் தர்ம சங்கடத்திற்கு ஆளாகிட நேர்கிறது. பல நேரங்களில் பிளான் பெறப்பட்ட உடன், எஸ்டிமேட் கேட்டு பின் ரொம்ப அதிகம் என்று கூறி பின் வாங்குவது நியாயமற்றது. ஏனெனில், எஸ்டிமேட்டை ஃபைனல் செய்வது பில்டரிடம் தானே தவிர, ஒரு கணிப்பில் எழும் பொறியாளர்
குறிப்பிடும் எஸ்டிமேட்டில் அல்ல. கட்டிட டிசைன் ஃபைனல் ஆகிவிட்ட பின்னர்
உறவினர்கள்/நண்பர்களிடம் ஆலோசனை பெற்று, அதை இப்படி மாற்றி விடலாமே, இதை அப்படி மாற்றி விடலாமே என்று கூறுவதனால் நேரமும், பணமும் வீணாவதை நிறைய உரிமையாளர்கள் உணர்வது இல்லை. ஆகவே, பொறியாளர், ஆர்க்கிடெக்ட் ஆகியோர் நமது கட்டிடப்பணியின் இறுதிவரை
இருக்கக்கூடியவர்கள் என்பதை நாம் உணர வேண்டும்” என்றார். மருத்துவத்திற்கும், சட்ட ஆலோசனைக்கும் செலவு ஆகத்தான்
செய்யும். அதற்காக அந்த இரண்டையும் நாம் புறக்கணித்து விட
முடியாது. அது போலத்தான் சிவில் பொறியாளருக்காக செலவிடும் தொகையை
பெரிதாக நினைத்து அவர்களைத் தவிர்த்தோமெனில், நம்முடைய கனவு இல்லங்கள், கட்டிடங்கள் ஆண்டாண்டு காலம் நிலைத்திருக்க முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
---------------------------------------- பொறி. எஸ். இராஜேந்திரன் , மாநில தலைவர், FACEAT அவர்கள் வாடிக்கையாளர்களிடம் ஏமாறாமல்
இருப்பதற்கு கட்டிடப் பொறியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்
குறித்து நம்மிடையே பேசுகையில் , 1. பொறியியல் படித்து முடித்தவுடன் ஒரு நிறுவனத்தில் அல்லது ஒரு
அனுபவமிக்க பொறியாளரிடம் 2 ஆண்டுகளாகவாவது பணியில் சேர வேண்டும்.கட்டுமானத் துறையில் உள்ள நுணுக்கங்களை நன்கு தெரிந்துகொண்ட பிறகே தனியாக தொழில்
செய்ய முனைய வேண்டும். 2.வாடிக்கையாளர்களிடம் கட்டிடம் கட்டுவதற்கான முதல்நிலை பேச்சு முடிந்த பிறகு ஸ்கீம் டிராயிங்கை கொடுத்திட வேண்டும். அதை அப்ரூவலுக்கு அனுப்புவதற்கு முன்பாக பார்ட் பேமெண்டாக ஒரு தொகையை நாம் வாங்கிட வேண்டும். 3. அட்வான்ஸ் பெற்ற பிறகே ஒர்கிங்
டிராயிங்கை வாடிக்கையாளரிடம் கொடுக்க வேண்டும். அதனைக் கொடுக்கும்போதே
கான்ட்ராக்ட் அக்ரிமெண்ட் ஃபார்மில் இரு தரப்பினரும் கையெழுத்திட வேண்டும். ஒரு
ஸ்டாம்ப் பேப்பரில் ஒரு சதுரஅடிக்கான தொகையை அதில்
குறிப்பிடுதல் வேண்டும். 4. பொறியாளர்கள் தனக்கென ஒரு நிறுவனத்தை தொடங்கி அதை முறையாக பதிவு
செய்தல் நல்லது. 5. கட்டிடப் பொறியாளர்களுக்கென்றே உள்ள அமைப்புதான் FACEAT. இந்த அமைப்பில் ஒரு உறுப்பினராக தன்னை இணைத்துக்
கொண்டாரெனில், அவருக்கு வேண்டிய தேவைகளை எங்கள் சங்கம் நிறைவேற்றித் தரும்.
6.பொறியாளர்கள் வாடிக்கையாளர் களுடன்
செய்ய வேண்டிய மாடல் அக்ரிமெண்ட் ஃபார்மை FACEAT தயாரித்திருக்கிறது. அதன்படி
அக்ரிமெண்ட் செய்து கொண்டால் பொறியாளர்கள் ஏமாறுவதற்கான வாய்ப்பே
இல்லை. 7. FACEAT மூலமாக தமிழகம் முழுவதும் நடைபெறும் தொழிற்நுட்ப கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும்போது, தொழில் ரீதியாக பொறியாளருக்கு ஏற்படும் சந்தேகங்கள் பற்றி நாங்கள் தெளிவாக விளக்குவோம் "
என்றார்: ------------------------------------------------------------------------------
-
நன்றி :பில்டர்ஸ் லைன்
No comments:
Post a Comment